அவரவர் முதுகெலும்பின் வலு அவரவர் பயணத்தைத் தீர்மானிக்கிறது!



('நிழல்  வலைக் கண்ணிகள்'   என்ற என் கட்டுரை நூலுக்கு எழுதிய முன்னுரை)





சிந்தனையை எழுத்தாக்குவதிலும் எழுத்தைக் களப்பணியாக்குவதிலும் என்னைத் தீவிரமாய் ஈடுபடுத்திய
படைப்பாளியும் சமூகப்போராளியும் என் தோழியுமான சிவகாமிக்கு.



முன்னுரை


தோழியரே, தோழர்களே! தமிழகத்தில் ஆதிக்கச் சிந்தனை ஓங்கியிருக்க அதே சமயம் அதற்கெதிரான மக்கள் திரட்சி ஓங்கியிருக்கும் காலகட்டத்தில் தான் இதை எழுதுகிறேன். பெண்ணுரிமைக்கான தளங்கள் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக ஒடுங்கிவிட்ட இத்தருணத்தில், அதற்கான காரணங்களை ஆராயுமிடத்து மேற்கொண்ட என் பயணம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது என்பதற்கான வெளிப்பாட்டுப் பதிவே இந்நூல்.



'சாதி மறுப்புப் பெண்ணியத்தை'த் தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்பாதையில் இந்த நூலின் மீது எனது வேறு எந்த நூலையும் விட நான் வலுவான நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருக்கிறேன். கரையானின் புற்றில் வந்து பாம்பு ஏறிக் குடியிருப்பது போல, 'பெண்ணடிமைத்தனம்' அல்லது 'பெண்ணுரிமை' இவற்றிற்காக நாளும் போராடி, உயிரை இழந்து, தம் ஆற்றலை இழந்து, காலத்தை இழந்து, கற்பனைகளையும் கனவுகளையும் இழந்து போயிருக்கையில் அதன் செங்கோலைத் தம் கைகளுக்குப் பறித்துக் கொண்ட ஆதிக்கசாதிப் பெண்டிருக்கும், சாதியின் வழியாக மக்கள் எதிர்ப்புக் குசும்பை அவர்களுக்குள்ளும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி ஆண்களுக்கும் எதிரானது என் எழுத்து!



பார்ப்பனப் பெண்கள் மட்டுமல்லாது, பிற ஆதிக்க சாதிப் பெண்களும், தமிழை, மொழியை அதன் பெண்களை வெறுப்புணர்வுடன் கசப்புணர்வுடன் நோக்கி தம் ஆதிக்க மாயைகளில் குதூகலிப்பதற்கான காரணங்களை நான் கண்டு கொண்டேன் என்பதற்கு  இந்த  நூலே ஓர் அசைக்கமுடியாத ஆதாரம். இதில் குறிப்பிடப்படுகின்ற ஆள் நான் இல்லை என்று தன்னை நிரூபிக்க விரும்புபவர்கள் 'தான்' என்னும் சாதி நிறம் படர்ந்த சுய நெருப்பு அகழியைக் கடந்து வர வேண்டும், இந்நூலின் வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மெளனமாகப் புறக்கணித்துச் செல்ல வேண்டும்! அது அது அவரவர் முதுகெலும்பின் வலுவைப் பொறுத்தது!



சிமோன் - தி - போவா, ஜெர்மைன் க்ரீர், ஈவ் என்ஸ்லெர், சூசன் சாண்டாக், காயத்ரி ஸ்பைவேக், ரோஸா லக்ஸம்பர்க், விரிஜினியா வுல்ஃப் என அகில உலகப் பெண்ணிய வாதிகளை எல்லாம் இறக்குமதி செய்த பின்னும் இந்தியாவில் பெண்ணுரியமையை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தமுடியாதபடிக்கு நம் பெண்களுக்கும் இந்தப் பெண்ணிய வாதிகளுக்கும் இடையே  திரை இருந்து கொண்டே இருக்கிறது. அந்தத் திரை என்பது  சாதியம் தான்!


ஆனால், இந்தச் சாதியத்தைப் பெண்ணிய விவாதம் ஆக்குவதற்கு குறைந்தது  இன்னும் நமது ஒரு தலைமுறைப் பெண்களையேனும் காவு கோரும், இந்தியா என்னும் நமது தீண்டப்படாத தேசம்.  சிவகாமியினுடான சமூக இயக்கக் கட்டுமானத்தின் போது ஏற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியன. நீங்கள் எத்தகையதோர் ஆளுமையுடயவராக இருந்தாலும், நீங்கள் ஒடுக்கப்பட்ட, பட்டியல் இனப் பெண்ணாக இருந்தீர்களென்றால், இயக்கத்திற்குத் தலைமை ஏற்கவோ, அல்லது ஒரு கருத்தியலை இயக்கமாக்கவோ தகுதியில்லாதவராகவே கருதப்படுவீர். ஆனால், எந்தச் சமூக விழிப்புணர்வும் அக்கறையும் அற்ற ஓர் ஆதிக்க சாதிப்பெண், குறைந்தபட்சம் தன் பாலியலைக் கொண்டே கூட அதிகாரத்தையும் தலைமைத்துவத்தையும் அங்கீகாரத்தையும் கோரமுடியும். பிற பெண்கள் கண்களில் மண் தூவ முடியும்!



பல சமயங்களில், ஆதிக்க சாதி ஆணுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் புரையோடிப் போன தம் மன அதிகாரத்தையும் அவலத்தையும் தமது ஆதாயங்களாக முன் வைத்து ஒடுக்கப்பட்ட பெண்களை இன்னும் அதிகமாய் ஒடுக்கியுள்ளனர், ஆதிக்க சாதிப் பெண்கள். ஒரு சிறிய குழுவாக இயங்கும் போது கூட அவர்கள் மனதின் அடியில் கசியும் ஆதிக்க மனதை, வன்மத்தை, ஏய்ப்பை, அழுக்கை அவர்களால் கண்காட்சியாக ஆக்க முடியாமல் இருந்ததே இல்லை. 'அதிகாரப் பகிர்வு' என்று வந்து விட்டால் அவர்களின் செயலூக்க நரம்புகள் அதிக விசையுடன் செயல்பட்டு, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கூட கபளீகரம் செய்து விடும்!



கடந்த வருடங்களில், 'சாதி மறுப்புப் பெண்ணியத்தின்' மீது நம்பிக்கையும் ஊக்கமும் கொண்டு நான் எழுதிய     கட்டுரைகள் இவை! தனி மனித இயக்கத்தின் தொனி இவற்றின் அடியில் ஓங்கியிருப்பதை உணரமுடிந்தாலும் அது எனக்கு விருப்பமில்லாத, வருத்தமான  ஒன்று தான்!  ஆனால், இந்த நூலின் மீது ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பது போல அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்! என் பாதை இது தான் என்பதைத்  தெளிவாக்கியும் வைத்திருக்கிறேன்! ஆகவே இதனால் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் உங்கள் எல்லோரின் இலக்கிய அங்கீகாரப் பந்தல்களிலும் ஏதோ ஒரு மாலையோ, புகழுரையோ அல்லது விருதோ கூட வேண்டாமெனச் சொல்லிக் கொள்கிறேன்! உங்களின் நவீன இலக்கியப் பந்தயத்தில் நானும் உங்களுக்குச் சமதையாகப் போட்டியிட்டு உங்கள் அங்கீகாரத்தில் பங்கு கேட்பேன் என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை! அஞ்சவே தேவையில்லை!



இந்நூலில், சாதியை மறுக்கும் என் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க்கவிதையில் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் கட்டுரைகள் என்று மூன்று வகைக் கட்டுரைகள் பதிவாகியுள்ளன. இதைத் தொகுத்தப் பின்பு, இதை இன்னும் விரிவான நூலாக்குவதற்கான எழுத்துப் பணியில் ஈடுபடவேண்டும் என்னும் உற்சாகம் பிறந்திருக்கிறது! 
செய்வேன்!



இந்த நூலில் இதுவரை ஒலிக்கும் என் தனிமனிதக் குரல் மட்டுமே  இந்த நூல் உருவாக முழுப்பொறுப்பும் இல்லை! வெவ்வேறு காலத்தில், என் வெவ்வேறு பயணத்தில் இன்று பெயர் நினைவில்லாத நூற்றுக் கணக்கான பெண்கள் தம் எழுச்சியினால் என்னைத் தீண்டி விட்டிருக்கின்றனர்! என்னைத்
தூண்டி விட்டிருக்கின்றனர்!   அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள்! 'வம்சி பதிப்பகத்தின்' 
கே.வி. சைலஜாவிற்கு என் அன்பும் நன்றிகளும்! ஓர் எழுத்தாளராய் இருந்து எழுத்தாளர்  மீது பதிப்பகங்கள் செலுத்தும் அதிகார துஷ்பிரயயோகத்தின் வடிவத்தையும் மூர்க்கத்தையும் மிக நுட்பமாய் நான் அறிவேன்!பதிப்பகங்களின் அதிகார வேட்டைக்கு இடையில், தனியொரு பெண்ணாய் நின்று அறம் பாராட்டுவது எளிது அன்று! போராட்டத்தில் களைக்காது  தன் சுவாசத்தின் உஷ்ணத்துடன் நூல்களை நெய்து வழங்கும் சைலஜாவின் கைகளால் இந்த நூல் உருப்பெறுவது என்பது நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது! அவரது வேட்கையின் அளவிற்கு அவர் இன்னும் மிக நீளமான பயணத்தைத் தன் எதிரே கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது! அவருக்கு என் வாழ்த்துக்களும்! இந்த நூல் எழுத்தாளர் சிவகாமிக்கு! அவரினும் என் மன எழுச்சிக்குப் பொருத்தமானவர் எவரும் இல்லை! அவர் அன்பு, நிறைய பெண்களுக்குப் போலவே எனக்கும்  நிறைய செய்திருக்கிறது! என்னிடம் அவருக்காக இந்த நூல் மட்டுமே இருக்கிறது!



என் கட்டுரை மொழியை ஒரு பொருட்டாகக் கருதி என்னுடன் இணைத்துக் கொண்ட நண்பர்களையும் நான் இவ்விடம் நினைத்துக் கொள்கிறேன். 'கீற்று ரமேஷ்', இனியொரு யோகன் அசோகன், பொன்னி பதிப்பகத்தின் வைகறை, ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன், பொதியவெற்பன், தமிழ் ஸ்டூடியோ அருண், இணைய நண்பர்கள் சாத்தப்பன்  மற்றும் வேல்கண்ணன் ஆகியோருக்கும் என் நன்றிகள்!



என் மின்னஞ்சல் முகவரி kuttirevathi@gmail.com
எழுதுங்கள்!


அன்புடன்,
குட்டி ரேவதி

2.1.2012











  

சென்னையில் அணு உலை எதிர்ப்பு மாநாடு, பி.26, 2012








அன்பார்ந்த தோழர்களே,



கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் தலைமுறைகளைக் காக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மக்கள் போராட்டத்தின் நீதியை, இந்திய அரசு அவதூறு செய்து வருகிறது. பொய் வழக்கு, அச்சுறுத்தல் மூலம் அப்போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது.


கூடங்குளம் அணு உலையால் கிடைக்கும் மின்சாரத்தைவிட, அது உருவாக்கும் பேரழிவு தமிழகத்தையே உருக்குலைய செய்து விடும். இலட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை பாழ்படுத்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும்.

இந்த அபாயத்தை நமக்கு எச்சரித்து, நம்மையும் தமிழ்நாட்டையும் காக்கப்போராடும் அணு உலையை சுற்றியுள்ள கிராம மக்களுடன் நாமும் தோளோடு தோள் நின்று போராட வேண்டும்.



இப்படிக்கு,
அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம்




பெண் என்ற ஒற்றை அடையாளம், ஆதிக்கச் சிந்தனைப் பெண்களுக்கானது!








http://koodu.thamizhstudio.com/nerkaanal_4.php













(‘புறனடை’ இதழில் வெளியான என் நேர்காணல்.)


நேர்காணல் செய்தவர்கள்:
ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே. ஜெய்கணேஷ்


நன்றி: 'புறனடை' இலக்கியச் சீரிதழ், 'தமிழ் ஸ்டுடியோ' இணைய இதழ்

கதம்பம்











உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி 
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.






குட்டி ரேவதி

'மாமத யானை' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை 

ஈருடல் மேவும் அறமே, காதல்!





என், ‘முத்தத்தின் அலகு’ காதல் கவிதைகளின் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை: 





காதல், ஓர் அதிகாலையில் பூவில் துளிர்த்திருக்கும் ஒற்றைப் பனித்துளியைப் போலத்தான் பூக்கிறது. அது காதல் என்று இனம் கண்டறிய எந்த அளவுமானியும் தேவைப்படவில்லை தான்! ஆனால், அது உடலுக்குள் ஒரு யானையைப் போல நுழைந்து கொண்டு துவம்சம் செய்து, நமது யதார்த்தத்தின் காடுகளை அழித்தொழிக்கும்! மீண்டும் நாம் சூரியனையும் சந்திரனையும் முறையாய்ச் சந்திப்பதற்குள் ஆண்டுகள் ஓடிவிடும்! முத்தங்கள் சிறகு முளைத்து பால்வெளியில் கோள்களாகச் சுழலத் தொடங்கியிருக்கும்! வேறென்ன செய்வது? காதலில் மட்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கவே முடியாது!



இந்த உலகை இன்னும் இன்னும் அழகாய் மாற்றுவது இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு தான்! மனிதனின் மகத்தான அனுபவங்களில் ஒன்று அது. கண்ணுடன் கண் நோக்கி, ஒவ்வொரு பார்வையாய் உள்ளிறங்கி மனதின் ஆழ்கடல் நீந்த விட்டு, தானும் நீந்தப் பழகி உடலின் அறங்களைப் பாடும் பாராட்டும் காதல் மனித உயிரின் இன்றியமையாத உணவு!



உடலை செல்போல அரிக்கும் அன்றாடத்திற்கு நடுவே, மனித உடலை எதிர்த்திசையில் அழைத்துச் செல்கிறது, காதல்! காதல் என்றால், முத்தமிட்டுக் கொண்டே இருத்தலும், ஊடலும் கூடலும் கொள்ளலும், தழுவலும் விலக நோதலும் மட்டுமே இல்லை! கருத்தொருமித்தவராய் இருந்து உலகின் ஒற்றை சமூக அலகாய் பெண்ணும் ஆணும், பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் மாறும் பயணம் தான் காதல் என்று அறிய போதுமான காதல் இலக்கியங்கள் இல்லை என்றே நினைக்கிறேன்!



மனித உடலில் பீறிடும் ஹார்மோன்கள் காதலைப் பாடுகின்றன! அவை தாம் கோபிக்கவும், வெறுக்கவும் கூட செய்கின்றன! ஹார்மோன்கள் இரத்தத்தில் சுழன்றோடும் பூக்கள் போலும்! ஆனால், தோட்டத்தில் நட்டு வைத்த செடி பூத்ததா என்று அறிய தினம் தினம் நாடி ஓடிப்போய் அதைப் பார்வையால் வருடிக்கொடுப்பதைப் போல காதல், மகத்தான ஒரு வருடலை சக மனிதனுக்கு பரிசளிக்கும் பக்குவத்தை அளிக்கிறது!



மனிதன் பயிலவேண்டிய அறங்களில் ஒன்றாகவே காதலும் இருக்கிறது! சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குள் அடங்காமல் முரண்டு பிடிக்கும் ஒரு காட்டு மிருகமாகவும் அது இருப்பதால் தான் அதை காலந்தோறும் வெற்றி கொள்ள முடியாமல் திணறும் ஒற்றை மனித சமூகம் பெருகிக் கொண்டே இருக்கிறது! காதலில் உடல் என்பது இருவருக்குமே அடிப்படையானதோர் உடைமையாக மாறுகிறது.  பேதத்தின் உடைகளைக் களைந்து கொள்கிறது. எந்த வயதானாலும், எந்தப் பின்புலமானாலும், எந்த மொழியானாலும் இருவரையும் சமநிலைக்கு இழுத்து வந்து மகிழ்ச்சியை பரப்புவதில் காதலுக்கு நிகரானதோர் உணர்வு இல்லவே இல்லை!



காதல் என்று சொல்லி இருவர் இணைந்த பின் சமூகத்தின் நடுவில் இருக்கும் குன்றின் மீது ஏறி நிற்கும் விளக்குகளாகி விடுகின்றனர்! அவர்கள் அங்கே நின்று எரியவேண்டும் எனும் போது தான் காதலின் சுடர் விளங்கும்! அவர்கள், சமூக உற்பத்தியில் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது! அது வெறுமனே, ‘உயிர்களை’ ஈன்று தருதல் மட்டுமே அல்ல! மாறாக, எல்லா விதமான அறிவு உற்பத்திக்கும் தம்மைத் தொடர்ந்து செலுத்துதலும் ஆகும்! வீடு, குடும்பம், பெண்டு என்று வேலி போட்டுக் கொள்கையில், அந்தக் காதலின் விளக்கு, ‘குடத்தில் இட்ட விளக்கென’ ஆகிறது!



ஈருயிர்கள் இணைந்து பகிர்ந்தும் பகர்ந்தும் இந்தப் பூமிக்குச் செய்ய வேண்டியவற்றை நினைவூட்டத் தான்,  உடலில் ஊற்றெடுக்கிறது, ‘ஹார்மோன்’ என்ற வேதி மது! ’காதல்’ என்பது அன்பினால் ஆன வெறும் உணர்வு மட்டுமே அன்று! சமூக உற்பத்திக்கு ஆதாரமான உறவும் கூட! ஈருயிர்கள் இணைவதால் உண்டாகும் அதிகமான சாத்தியப்பாடுகளை, அன்பு தான் சாத்தியப்படுத்துகிறது! இது ஒரு நுட்பமான இலக்கணம்! சேர்ந்து வாழும் போதும், இயங்கும் போதும், பொதுவான அனுபவங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொள்ளும் போதும் மட்டுமே உணரக்கூடியது!



’காதல் போயின் சாதல்’ என்று பாரதி சொன்னது கூட, இக்காதல் இல்லாத மனிதன் செத்துப் போனதற்குச் சமானம் என்ற அர்த்தத்தில் தான்! இதற்கு மேல் காதல் என்றால், எழுதியோ உரையாடியோ உணர்ந்து கொள்ள இயலாது! காதலித்தும், காதலிக்கப்பட்டும் வாழ்ந்தால் தான் அது புரிதலுக்குச் சாத்தியப்படும்! காதலென்று ஆகும்!


*



என் காதல் ஐந்திணை வெளிகளிலும் நிகழ்ந்ததாகவே எனக்கு நினைவு இருக்கிறது! மலைகளிலும், காடுகளிலும், ஆற்றின் படுகைகளிலும், கடல் வெளிகளிலும், வயற்புறங்களிலும் என உறவையும் உடலையும் செழுமையூட்டிக் கொள்ள பயணித்துக் கொண்டே இருந்தது!  இன்னும் சொல்லப்போனால் யானைப்பசியுடன் அது திரிந்தது! காதலின் ஐந்திணைத் தன்மைகளையும் நுகர்ந்தது!




தாய் தந்தை ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்ததைக் கண்ட நினைவுகள் மனதைப் பீடித்திருந்தது கூடக் காரணமாக இருக்கலாம்! அதன் அலைக்கழிப்பில், காதலின் தீரங்களைக் கண்டறியும் வேட்கையுடன் நான் எந்தவித மனத் தடையுமில்லாது இருந்தேன்!



ஓர் ஆழமான உறவு, உடலுக்கும் மனதுக்கும் அதன் அகவெளிகளுக்குள்ளும் நிகழ்த்தும் ரசவாதம், பின் எப்போதும் நம் செயல்கள் எல்லாவற்றிற்கும் உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது என்பதை இப்பொழுது உணர்கிறேன்! சரியான பருவத்தில் மழை பெய்வது போல காதலும் நிகழவேண்டும்! அது கனமழையாக நம் உடல் நிலத்தில் ஊடுருவ வேண்டும்! பின், வாழ்வியலுக்கான போராட்டங்களில் ஈடுபடும் சவால்களை ஏற்பது மிகவும் எளிதாகிவிடுகிறது!



நான் காதலை ஒரு சமத்துவமான உறவுக்கான அழைப்பாகவே பார்க்கிறேன். காதலின் உறவில் பங்கு பெறும் இருவரையும் நீளமான வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய தியாகங்களுக்குத் தயார் செய்கிறது!  நான் அந்தப் பாதையில், நெடுஞ்சாலையில் பலவிதமான போராட்டங்களையும், தயக்கங்களையும், குழப்பங்களையும் கடந்து வந்து சேர்ந்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்! வாழ்க்கையில் பாலைவனத்தில்  இன்று காதல் நிரந்தர மகிழ்ச்சிக்கான ஓர் ஊற்றாக இருக்கிறது.



*


நவீன வாழ்க்கையும் சமூகக் கட்டமைப்புகளும் வேறு மாதிரியான அனுபங்களைக் காட்டுகின்றன. நவீன தொடர்புசாதனங்கள் உரையாடலுக்கான வாய்ப்பை எளிமைப்படுத்திவிட்டதால், ‘தொடுதல்’ உணர்ச்சியை மிகைப்படுத்தியிருக்கின்றன! உடலைப் பேரமாக்கியிருக்கின்றன! மனதின் அதிகாரத் தேவைகளை உடல் வழி சூழ்ச்சிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன!



எப்பொழுதும் சைபர் ஸ்பேஸைக் கடந்து நீளும்  கைகளை வளர்த்துக் கொண்டோம் நாம்! அதே சமயம், உடலை பணயம் வைத்து எதையும், எந்த ஆதாரத்தையும் ஈட்டும் அறமற்ற செயலிலும் ஈடுபடத்துணிகிறோம்! இரு உடல்களுக்கு இடையே நிகழும் காதல் உரையாடலும் அதன் சூழல், சமூகம், இன்ன பிற மனிதர்கள் சார்ந்த அறங்களும் இன்று மிக முக்கியமாகப் படுகின்றன. உடலை அதிகாரமாகவும், உறவை ஈனமான செயலாகவும் கருதும் சமூகத்தில் மனித நாகரிகமும், பண்பாடும், இயற்கையின் நெறிகளுமே கூட மண்ணாய்ப் போகும். காதல் இல்லாத மானுடம், வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளைத் தொலைத்துத் தரையில் வெற்றுத்தாளாய்க் கிடப்பதைப் போல கிடக்கும்!       



நிறுவனங்களை நம்பும் மனித இனமும் சமூகமும் காதலை எதிர்த்தும் நிராகரித்துமே வந்திருக்கின்றன. மனித பரிணாம வளர்ச்சியின் முளையைக் கிள்ளியெறிய முனையும் மனித மனம் தான், காதலில் ஈடுபடுவர்களை சமூக ஏற்றத் தாழ்வைக் காரணம் காட்டி, விரட்டுகிறது, அடிக்கிறது, மரத்தில் கட்டி வைத்து எரிக்கிறது! ஆனால், இதனாலெல்லாம் காதல் அணைந்து போவதில்லை! அங்கு அது கனலாய்க் கனன்று பின்னுமோர் மனத்தைப் போய் பற்றிக்  கொண்டு ஆட்டுவிக்கத் தான் செய்யும்! மனிதனும் மனிதனும் பூமியில் வேறெதற்கு?



சாதியை அதிகாரமாக்கி அதன் பொருட்டு, தாம் ஈன்ற பிள்ளையையே எரித்த, கொன்ற சம்பவங்கள் நெஞ்சின் கலக்கத்தை அதிகப்படுத்துகின்றன. என்றாலும், அத்தகைய சாதி கடந்த காதலில் ஒன்றி, துணிவுடன் போராடிய இளம் நெஞ்சங்களுக்கானது இந்தக் கவிதைகள். ஆழி செந்தில்நாதன் தான், என் காதல் கவிதைகளைத் தொகுக்கும் ஆலோசனைகளுடன் வந்தார். அவரின்றி இந்நூலுக்கான சாத்தியமே இல்லை. அவருக்கு என் நன்றிகள்! ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்’, ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’, ‘உடலின் கதவு’, ‘யானுமிட்ட தீ’ ஆகிய என் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடனும், புதிய கவிதைகளுடனும் வந்திருக்கிறேன்! 



’காதல் கவிதைகளை’ச் சேகரிப்பது என்பது விநோதமான பணி எனத் தோன்றியது! முத்தங்களைச் சேகரிப்பதற்கு நிகரானதொரு பணி தான்! ஒரே சமயத்தில்  பலவிதமான உணர்வுகள் என்னைப் பீடித்தன என்று தான் சொல்லவேண்டும். காதல் என் சுய அளவில் பிரமாண்டமான காலக்கட்டத்தையும் ஆவியையும் எடுத்துக்கொண்டது என்றாலும் அது குறித்து எனக்கு எந்தக் குற்றச் சாட்டுகளும் இன்று இல்லை.



அது என்னளவில் உரையாடலுக்கான ஓர் எழுச்சியாக இருந்திருக்கிறது அல்லது, பேண முடியாது இருந்த மெளனத்தை, ‘காதலின்’ பெயரால் பத்திரப்படுத்துவதாய் இருந்திருக்கிறது! ஓர் உறவு மலரும் போதே அதை உன்னிப்பாய்க் கவனிக்கையில் அதன் ரகசியங்கள் எல்லாம் புலர்ந்ததும், அதன் மீது இருக்கும் பிரமிப்பு தொலைய அது காதலாக அல்லாமல், தோழமையாக எல்லாவிதமான சமூக இயக்கத்திற்கும் அடிப்படையான உறவாய் மாறிவிடுகிறது! அம்பேத்கர் சொன்னது போல, நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட என் பாதையில் பெண்  ஆண் என்ற பாலிமைப் பேதத்தை என் அளவில் வெகு நிச்சயமாக உணர்ந்து கொண்டிருக்கும் போது பெண் – ஆண் நட்பு அல்லது உறவின் மீதான ஈர்ப்பே கூட  மெல்ல கனிந்து, ‘காதலின் சுடரென’ நெஞ்சில் எரியும்!



செழுமையான் காதலின் வண்ணமும் வெளிச்சமும் அடங்கிய காதலின் திண்மை அடங்கிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறேன். அவற்றின் கூதல், உங்களுக்கும் உங்கள் உங்கள் காதலை நினைவூட்டிக் களிப்பூட்டட்டும். உங்களை காட்டுப் பறவைகளாகட்டும். காற்றின் புரவிகளாக்கட்டும். மத யானைகளாக்கட்டும். பெருவெள்ளமாய் இழுத்துச் செல்லட்டும். சூரியனாய் உங்கள் தலை மேலே நகரட்டும். தனிமைக்கு ஒரு நிலவைப் பரிசளிக்கட்டும். உங்களை வேறு பருவகாலங்களுக்கு இழுத்துச்செல்லட்டும். வேறென்ன? முத்தத்தின் அலகுகளால் ஒருவருக்கொருவர் அன்பைப் புகட்டிக்கொள்ள காதலின் தேவைக்கான காலம் இது!




குட்டி ரேவதி
15.11.2011



நன்றி: ’ஆழி’ பப்ளிஷர்ஸ்

வம்சி வெளியீடாக என் இரு நூல்கள்









                        வம்சி பதிப்பகத்தின் வெளியீடாக என் இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. 
                        'மாமத யானை' - கவிதைத் தொகுப்பு
                        'நிழல் வலைக் கண்ணிகள்' - பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு

                        புத்தகக் கண்காட்சியில், வம்சியின் கடை எண்: 313 -ல் இந்நூல்களை 
                        வாங்கிக் கொள்ளலாம் என நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!















குட்டி ரேவதி